UPDATED : நவ 29, 2024 12:00 AM
ADDED : நவ 29, 2024 08:34 AM

போடி:
தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் சுருக்கெழுத்து, தட்டச்சு, அக்கவுண்டன்சி தேர்வுகள் பிப்., 15 முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சு (டைப்ரைட்டிங்), சுருக்கெழுத்து (சார்ட்ஹேண்ட்) அக்கவுண்டன்சி (வணிகவியல்) தேர்வுகள் நடைபெறும்.
தட்டச்சு சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மதிப்பெண் சலுகை உண்டு. இதனால் ஆண்டு தோறும் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நடப்பாண்டிற்கான சுருக்கெழுத்து உயர் வேக தேர்வு பிப்.,15, 16 ம், இளநிலை, முதுநிலை பிப்., 22, 23 ம், வணிகவியல் (அக்கவுண்டன்சி) இளநிலை, முதுநிலை பிப்., 24 ம், தட்டச்சு (டைப்ரைட்டிங்) இளநிலை, முதுநிலை, உயர்வேகம் மார்ச் 1, 2 ல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 6 ல் வெளியாகும் என அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.