UPDATED : மே 07, 2025 12:00 AM
ADDED : மே 07, 2025 11:29 AM
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு மே 11 முதல் 25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 50,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பள்ளிக்கு முன் மழலையர் மையமாகவும், ஊட்டச்சத்து மையமாகவும் விளங்குகின்றன. இதனால் அனைத்து நாட்களிலும் செயல்பட்டது. கடந்த ஆண்டில் முதல்முறையாக, மே 8 முதல் 22 வரை அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து, 15 நாட்களுக்கு சத்து மாவு வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் மே மாதம் முழுதும் விடுமுறை வேண்டும் என கோரி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், வரும், 11 முதல், 25 வரை, 15 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் அரசாணை வெளியிட்டுள்ளார். விடுமுறைக்கு முன்பே, 15 நாட்களுக்கு கணக்கிட்டு, 750 கிராம் பாக்கெட் செய்யப்பட்ட சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை, குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

