பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
UPDATED : மே 15, 2026 10:16 PM
ADDED : மே 15, 2026 10:19 PM

கடலுார்:
மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த 1,322 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் 117 அரசுப்பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள், 101 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 248 பள்ளிகளில் இருந்து 14,919 மாணவர்கள், 14,921 மாணவிகள் என, மொத்தம் 29,840 பேர், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதில், 14,040 மாணவர்கள், 14478 மாணவிகள் என, மொத்தம் 28,518 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.57 சதவீதம் ஆகும்.
இதன் மூலமாக கடலுார் மாவட்டம் மாநில அளவில் 19 இடத்திற்கு பின் தங்கியது. இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம் கடந்த 2024 - 2025ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 10 இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும், ஜூன் 29ம் தேதி துணைத் தேர்வு துவங்க உள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாதததற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, தோல்வியடைந்த மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.
இதன் மூலமாக அவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் எனவும், அடுத்த கல்வியாண்டில் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் ஆயத்தப் பணிகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது.
இது குறித்து முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் கூறியதாவது:
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 162 பள்ளிகளை சேர்ந்த 1,322 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். ஒன்றிரண்டு பாடங்களில் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இவர்களுக்கு விரைவில் பாடவாரியாக சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு எழுத பயிற்சி அளிக்கப்படும்.
ஒரே பள்ளியிலும் சிறப்பு பயிற்சி அளிக்கலாம் அல்லது அருகில் உள்ள ஒன்று முதல், 3 வரையிலான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை ஒருங்கிணைந்து பயிற்சி அளிக்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடி தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற்று, சக மாணவர்களுடன் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
