UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM
ADDED : ஜூலை 21, 2023 04:01 PM
சென்னை:
நடைபெற்ற ஜூன்/ஜூலை 2023க்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 24ம் தேதி வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த கல்வியாண்டு நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் ஜூலை 24ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:ஜூன்/ஜூலை 2023, மேல்நிலைத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/-. மறுகூட்டலுக்கான கட்டணம் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305/-, மற்ற பாடங்களுக்கு ரூ.205/-.விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல் II/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். மறுகூட்டல்- I கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
