UPDATED : ஆக 06, 2011 12:00 AM
ADDED : ஆக 06, 2011 12:29 PM
பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்வில் பங்கு பெற `எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஒரு பாடத்திற்கு தேர்வு கட்ணமாக ரூ.50ம், இதர கட்டணமாக ரூ.35ம் செலுத்த வேண்டும். ஒரு பாடமாக இருப்பின் மொத்தம் ரூ.85ம், இரண்டு பாடமாக இருப்பின் 135ம் செலுத்த வேண்டும்.
மேலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளி விட்டவர்களும், 1.9.2011 அன்று 16 வயது நிரம்பியவர்களுக்கும் பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் தனித் தேர்வர்களாக கருதப்படுவர்.
இவர்கள் `எச்.பி.' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.150ம், இதரக் கட்டணமாக ரூ. 35ம், பேச்சு, செவி திறன் தேர்வுக்கு ரூ.2ம் என மொத்தமாக ரூ.187 செலுத்த வேண்டும்.
சென்னை மாவட்ட தனித் தேர்வர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கேட்புக் காசோலை அல்லது வங்கிக் காசோலை மூலமாக `அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6' என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
மற்ற மாவட்ட மாணவர்கள் அரசுக் கருவூலங்களில் கருவூலச் சீட்டு (செல்லான்) மூலமாக மட்டுமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
புதிதாக தேர்வு எழுதுபவர்கள் 2005-2006ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுத வேண்டும்.
தொழிற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் தொழில்கல்வி பாடத் திட்டங்களில் தோல்வி அடைந்தவர்கள் பழைய பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுத செப்டம்பர் 2011, மார்ச் 2012 ஆகிய இரு பருவங்களில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், புதுச்சேரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், சென்னை ஆகியவற்றில் உள்ள அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12ம் தேதி மாலைக்குள் பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாக வந்தோ மாணவர்கள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். யாரும், சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, அதில் உள்ள குறிப்புகளை மாணவர்கள் கவனமாக படித்துப் பார்க்கவேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தாங்கள் கடைசியாக படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் மட்டுமே அட்டஸ்டேஷன் வாங்கியிருக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்பத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் தேர்வு மையத்தில் ஒன்றை நிச்சயமாக தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12ம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
