சங்கம் 2025- செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்முனைவை மையமாகக் கொண்ட தொழில் மாநாடு
சங்கம் 2025- செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்முனைவை மையமாகக் கொண்ட தொழில் மாநாடு
UPDATED : ஜூலை 05, 2025 12:00 AM
ADDED : ஜூலை 05, 2025 06:02 PM

சென்னை:
சென்னை ஐஐடி மற்றும் அதன் முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கம் 2025 நிகழ்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவை மையமாகக் கொண்ட இந்த ஆண்டு மாநாட்டில், உலகம் முழுவதிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவின் வளர்ச்சி பாதை 32 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்கிறது. இளம் புதுமையாளர்களின் ஆர்வம் மற்றும் தொழில்நுட்பங்களில் நாட்டின் முதலீடு இந்த மாற்றத்தை உருவாக்கும், என அவர் தெரிவித்தார். மேலும், டீப் டெக் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது புதுமைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும்.
இவ்வாறு பேசினார்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஸ்டார்ட்- அப் பிட்ச் பெஸ்ட் நடைபெற்றது. இதில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்ப துறையில் செயல்படும் 20-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்புகள் தங்கள் கண்டுபிடிப்புகளை 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் துணிகர முதலீட்டாளர்களிடம் வழங்கினர். போலியம் சென்சிங், க்யூ-ஆக்சிஸ் மோட்டார்ஸ் மற்றும் ஜெண்டார் மெட் டெக் ஆகிய நிறுவனங்கள் போட்டியில் சிறந்த மூன்று இடங்களை பெற்றன.
மேலும், தொழில்முனைவர்களுக்கான புதிய பாடநெறி, மற்றும் தொழில் சார்ந்த புத்தக வெளியீடுகள் நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக இருந்தது. ரமேஷ் ஸ்ரீனிவாசன் எழுதிய ஐஐடிஎம் முன்னாள் மாணவர்களுக்கான தொழில்முனைவோர் படிப்புகள், கிருஷ்ணன் நாராயணன் மற்றும் வெங்கட் ராமசாமி எழுதிய கூட்டு நுண்ணறிவு புரட்சி: மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் புதிய மதிப்பை எவ்வாறு உருவாக்குகிறார்கள், அம்பி பரமேஸ்வரன் எழுதிய சந்தைப்படுத்தல் கலவை: சந்தைப்படுத்தல் வெற்றிக்கான நான்கு அத்தியாவசியப் பொருட்கள் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி பேசுகையில், இந்த நிகழ்வு இந்தியாவை தொழில்முனைவு மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கான வலிமையான அடித்தளமாக அமையும். விக்சித் பாரத் 2047 இலக்கை நோக்கி நாம் பயணிக்க இந்த மாதிரியான நிகழ்வுகள் தேவை என்றார்.
நிகழ்வில், ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட், ஏதர் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். தொழில்முனைவு, செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஸ்டார்ட்-அப்புகள் இம்மாநாட்டின் மூலம் முதலீட்டாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டன.