27 முறை முதலிடம், இன்று 5வது இடம் பின்னுக்கு போன விருதுநகர் மாவட்டம்
27 முறை முதலிடம், இன்று 5வது இடம் பின்னுக்கு போன விருதுநகர் மாவட்டம்
UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:07 PM
விருதுநகர்:
பிளஸ் 2 தேர்ச்சியில் 27 முறை முதலிடம் பெற்றது விருதுநகர் மாவட்டம். 2013 - 14, 2015 - 16 ஆண்டுகளில் மட்டும் மூன்றாவது இடம், 2019- 20ல் ஏழாவது இடம் 2020 -21ல் நான்காவது இடம், 2021 - 22ல் இரண்டாவது இடம். மற்ற அனைத்து ஆண்டுகளிலும், 27 முறை முதலிடம் பிடித்துள்ளது.
தேர்ச்சியில் முதலிடம், 2018 முதல் பிடிக்க முடியாதது விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வந்தது. முன்னேறிய மாணவர்கள், பின் தங்குவது ஏன் என தொடர்ந்து கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, கடந்த கல்வியாண்டில், 97.85 சதவீதம் எடுத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்திருந்தது. ஆனால் தற்போதோ, 96.64 சதவீதம் பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வை, 21,277 மாணவர்கள் எழுதியதில் 20,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 1.21 சதவீதம் குறைவு. ஓராண்டாக விருதுநகர் பள்ளிக்கல்வித்துறையில் முந்தைய சி.இ.ஓ., மீது லஞ்ச வழக்கு, அதிகாரிகள், அலுவலர்கள் இடமாற்றம் போன்ற பரபரப்புகள் இருந்தன.
மேலும், தற்போது தேர்வெழுதிய மாணவர்களில் சிலர் பிளஸ் 1ல் தேர்விலும் தோல்வி அடைந்து பின் துணை தேர்வு மூலம் வெற்றி பெற்று பிளஸ் 2 தேர்வை சந்தித்ததும் இந்த நிலைக்கு காரணம் என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.