பல்கலைகளில் 'ஆன்லைன்' படிப்பு அனுமதி தரும் விதிகளில் தளர்வு
பல்கலைகளில் 'ஆன்லைன்' படிப்பு அனுமதி தரும் விதிகளில் தளர்வு
UPDATED : டிச 05, 2025 08:06 PM
ADDED : டிச 05, 2025 08:11 PM

சென்னை:
நாடு முழுதும் உள்ள பல்கலைகள், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளை பயிற்றுவிக்க, ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெறுவது அவசியம்.
மேலும், புதிய கல்வி நிறுவனங்களும், ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களும், இன்ஜி., மாணவர் சேர்க்கை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும்.
பல்கலைகள், தங்கள் கல்வி நிறுவனங்களில், 'ஆன்லைன்' மற்றும் தொலைதுார வழியில், தொழில்நுட்ப பட்டப் படிப்புகள் துவங்க வேண்டுமானால், அப்பல்கலை இரண்டு கல்வியாண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இந்நிலையில், 2026 - 27ம் கல்வியாண்டு முதல், இந்த விதியில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கல்வியாண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது என, ஏ.ஐ.சி.டி.இ., கூறியுள்ளது.
மேலும், கற்றல் மற்றும் பணியிடங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க, அனுபவ கற்றல் திட்டங்களை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. இதையொட்டி, மாணவர்கள் படிக்கும்போதே, வேலை வாய்ப்பு திறன்களை பெற, தொழில்துறையுடன் இணைந்து, கற்றல் பணிகள் மேற்கொள்ள, ஏ.ஐ.சி.டி.இ., திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், தொடர்ந்து மூன்று ஆண்டுகள், 100 கோடி ரூபாய்க்கு மொத்த வணிகம் செய்துள்ள நிறுவனங்களுடன், கல்வி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

