சிறுதொழிலில் 'அப்ரன்டிஷிப்' விரிவான திட்டம் தயாராகிறது
சிறுதொழிலில் 'அப்ரன்டிஷிப்' விரிவான திட்டம் தயாராகிறது
UPDATED : மே 05, 2026 09:50 PM
ADDED : மே 05, 2026 09:55 PM

புதுடில்லி:
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில், தொழில் பழகுநர்களை ஊக்குவிக்க தேசிய அளவில் விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இதன்படி கொள்கை, ஒழுங்குமுறை, நிதிச் சீர்திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சிறுதொழில் நிறுவனங்களில் 'அப்ரன்டிஷிப்' முறையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து வருகிறது. இதற்காக, பல்வேறு துறைகளுக்கு இடையில் ஆலோசனைகள் துவங்கியுள்ளன.
அதன்படி, பல்வேறு எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் கூட்டாக, தொழிற்பயிற்சியை வழங்கும். மேலும், ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு நிறுவனம் வீதம் தொழில் பழகும் மாணவர்களால் பயிற்சி பெற முடியும்.
இது தவிர, பட்டப் படிப்பு படிக்கும் போது தொழில் பழகுவதற்கான வாய்ப்பு, வேலை வாய்ப்புடன் இணைந்த தொழிற்பயிற்சி ஆகியவற்றை மேலும் மேம்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போதைய நிலையில் 1.90 லட்சம் நிறுவனங்கள் தொழில் பழகுநர் திட்டத்தில் பதிவு செய்திருந்தாலும் இதில் 51,000 நிறுவனங்கள் மட்டுமே பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டின் இளைஞர்கள் எண்ணிக்கை, வரும் 2036ல் 34.50 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதன் வாயிலாக 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற இலக்கை அடைய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழில் பழகுநர் திட்டங்களில் பயிற்சியை நிறைவு செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், பெரும்பாலோனோர் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தான் அதிகம் பயிற்சி பெறுகின்றனர். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
