UPDATED : நவ 23, 2020 12:00 AM
ADDED : நவ 23, 2020 09:30 AM
சென்னை:
அகரமுதலி இயக்கம் சார்பில், தமிழில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, 494 கலைச்சொற்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அகர முதலி இயக்ககத்தின், 72வது கூட்டம், சென்னையில் நடந்தது. அதில், &'கவிதை உறவு&' இதழின் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தின் இயக்குனர் தமிழ் இயலன், புலவர் மதியழகன், கவிஞர்கள் சீனி, பழனி, ஞால ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், வங்கியில் பயன்படுத்தப்படும் பிற மொழி சொற்களுக்கு இணையான தமிழ் கலைச் சொற்களை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டது.
பிற மொழி கலப்பில்லாமல் பேசுவது, எழுதுவதன் அவசியம் குறித்து பேசிய ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வங்கியியல் சார்ந்த, 15 ஆயிரம் கலைச்சொற்களை உருவாக்கி, கலைச்சொல் அகராதி தயாரித்ததாக கூறினார். இக்கூட்டத்தில், அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட, 500 புதிய தமிழ் கலைச் சொற்களில், 494 சொற்களுக்கு, அறிஞர்கள் ஒப்புதல் வழங்கினர். ஏற்கனவே, 19 ஆயிரம் புதிய கலைச்சொற்கள் ஏற்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது. மேலும், 3,700 சொற்கள் அரசாணையாகும் தருவாயில் உள்ளன.
