UPDATED : ஜன 21, 2011 12:00 AM
ADDED : ஜன 21, 2011 03:16 PM
சென்னையிலுள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், 5 வது &'சென்னை அறிவியல் திருவிழாவை&' சயின்ஸ் சிட்டி நடத்த உள்ளது.
மாநில உயர்கல்வி துறையின்கீழ் வரும் சயின்ஸ் சிட்டி என்ற அமைப்பு, வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை "அன்றாட வாழ்க்கையில் அறிவியல்" என்ற தலைப்பில் அறிவியல் திருவிழாவை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடத்த உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, 1000 மாணவர்கள் பங்கேற்கும் அறிவியல் நடைபயணத்தை ஜனவரி 28 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விழாவில், 130 ஸ்டால்கள் கொண்ட கண்காட்சியும், குழு கலந்துரையாடல்களும் இடம்பெறும். பிற்காலத்தில் அறிவியல் படிப்புகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில், மொத்தம் 10 கோடி மேல்நிலை பள்ளி மாணவர்களில் குறைந்தபட்சம் 2.5 கோடி மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று அரசு திட்டமிடுகிறது. நாட்டில் தற்போது அறிவியல் ஆசிரியர்களுக்கான 12 லட்சம் காலியிடங்கள் பள்ளிகளிலும், 7 லட்சம் காலியிடங்கள் கல்லூரிகளிலும் உள்ளன.
கல்லூரியில் உதவி பேராசிரியர் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரசின் ஆரம்ப சம்பளம், ஐ.டி. துறையில் உள்ளவர்கள் பெறும் ஆரம்ப சம்பளத்தைவிட அதிகமாக உள்ளது. விஞ்ஞானிகள் உருவாகும் விகிதாச்சாரம், இந்தியாவில் 7100 பேருக்கும் ஒருவராகவும், சீனாவில் 1080 பேருக்கு ஒருவராகவும், தென்கொரியாவில் 240 பேருக்கு ஒருவராகவும், ஸ்வீடனில் 163 பேருக்கு ஒருவராகவும் உள்ளது என்று விழா ஏற்பாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
