UPDATED : செப் 08, 2013 12:00 AM
ADDED : செப் 08, 2013 11:50 AM
பெ.நா.பாளையம், கோவை: பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த 75 வயது முதியவர்,"தரிசு நிலத்தில், பயிர் சாகுபடி" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, சென்னை பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வஞ்சியம்மன் நகரில் வசிப்பவர் ராமசாமி, 75. இவர், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், விவசாயத்தில் எம்.எஸ்சி., பட்டமும் (தொலைதூரக் கல்வி), கிராம மேம்பாடு என்ற தலைப்பில் எம்.பில்., பட்டமும் பெற்றவர். மாநில திட்டக்கமிஷனில் பணியாற்றிய அனுபவம் பெற்ற ராமசாமி, வேளாண் துறையில் டிராக்டர்களின் பங்கு, மகளிர் திட்ட மேம்பாடு, கிராமங்களில் கண் சிகிச்சை முகாம்களின் தாக்கம், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வு நடத்தியுள்ளார்.
இது தவிர, கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்முறைபடுத்தல் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் நடத்தியுள்ளார். "தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியதில் சென்னை பல்கலை இவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
தனது, 75வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து ராமசாமி கூறியதாவது:
"சாதிக்க வேண்டும் என்ற மனப் பக்குவம் இருந்தால், எந்த வயதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம். சிறு வயதில் என்னுடைய தாய், தந்தை இருவருமே நான் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என விரும்பினர். அது நடக்கவில்லை; அவர்களுடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டும், எனக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவும், விவசாயத்தின் மீது எனக்கு இருந்த பற்று காரணமாக, அதே துறையில், "தரிசு நிலத்தில் பயிர் சாகுபாடி" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டேன்.
மானாவாரியான தரிசு நிலத்தில் ராகி, சோளத்தை பயிரிடுதல், அதையொட்டி விவசாய உப தொழில்களான ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளின் வளர்ப்பு முறைகள் என்பதை எனது ஆய்வின் தலைப்பாக எடுத்துக் கொண்டேன். திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன்.
எனக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நான் டாக்டர் பட்டம் பெற, எனது பேரக்குழந்தைகள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர்." இவ்வாறு, ராமசாமி தெரிவித்தார்.
