தொடக்கல்வியில் 93% தேர்ச்சி: தமிழக மாணவர்கள் சாதனை!
தொடக்கல்வியில் 93% தேர்ச்சி: தமிழக மாணவர்கள் சாதனை!
UPDATED : நவ 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 92.46 சதவீதம்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் (சர்வ சிக்ஷா அபியான்) திட்டத்தின் கீழ் 2003-04ம் ஆண்டில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 367 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்களில் 93.94 சதவீதம் பேர் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடக்கக் கல்வியை முடித்துள்ளனர்.
இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களில் 91.18 சதவீதம் பேரும் பழங்குடியினரில் 88.34 சதவீதம் பேரும் படிப்பை முடித்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு செயல்வழி கற்றல் முறை கடைப்பிடிக்கப்படுவது ஒரு காரணம் என்று தெரிகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பை முடிக்கும்வரையில் படிப்பை இடையிலேயே விட்டு விட்டவர்கள் 10,022 பேர்தான். அதாவது 1.23 சதவீதம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முன்னணியில் இருப்பது கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களாகும். இதில் பின்தங்கியிருப்பவை வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள்.
இந்த ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த 9.3 லட்சம் பேரில் 92.7 சதவீதம் பேர் எட்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளனர். இதில் தாழ்த்தப்பட்ட
மாணவர்களின் சதவீதம் 90.15. பழங்குடி இன மாணவர்களின் எண்ணிக்கை 89.08 சதவீதம்.
மாணவர்கள் கற்பதற்கேற்ற சூழ்நிலை வகுப்பறைகளில் நிலவுகிறது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்தையும் உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தொடக்கப் பள்ளிகளில் பெயிலாகும் மாணவர்களின் எண்ணிக்கை 6.14 சதவீதத்திலிருந்து 4.84 சதவீதமாகவும் நடுநிலைப் பள்ளிகளில் 6.67 சதவீதத்திலிருந்து 5.41 சதவீதமாகவும் குறைந்துள்ளது. எனினும் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
