10 மருந்தியல் கல்லுாரிகள் புதிதாக தொடங்குவதில் சிக்கல்
10 மருந்தியல் கல்லுாரிகள் புதிதாக தொடங்குவதில் சிக்கல்
UPDATED : மே 04, 2026 04:13 PM
ADDED : மே 04, 2026 04:14 PM
சென்னை:
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், புதிதாக 10 மருந்தியல் கல்லுாரிகள் தொடங்குவதற்கு இட வசதி இல்லாததால், அவற்றை தொடங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் மருந்தியல் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு, 20 தனியார் கல்லுாரிகள் தொடங்கப்பட்டாலும், 60 ஆண்டுகளுக்கு மேலாக, புதிதாக அரசு மருந்தியல் கல்லுாரிகள் தொடங்கவில்லை.
தற்போது சென்னை, மதுரையில் மட்டுமே அரசு பி.பார்ம்., கல்லுாரிகள் உள்ளன. மேலும், தஞ்சாவூர், மதுரை, கோவையில், டி.பார்ம்., கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், மருத்துவ பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், அப்பணியிடங்களை நிரப்புவதுடன், அரசு மருந்தியல் கல்லுாரிகளை புதிதாக தொடங்க வேண்டும் என, மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதை தொடர்ந்து, தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன், பத்து மருந்தியல் கல்லுாரிகளை தொடங்க, மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டது.
அதற்காக, ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் மருந்தியல் கல்லுாரிகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. இக்குழுவினர், 10க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரிகளில் ஆய்வு செய்தனர்.
அங்கு ஏற்கனவே இருக்கும் படிப்புகளுக்கே, போதிய வசதிகள் இல்லாத நிலையில், மருந்தியல் கல்லுாரியும் தொடங்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மருந்தியல் கல்லுாரி தொடங்க, அரசு முயற்சித்து வருகிறது. புதிதாக கட்டடம் கட்டி, கல்லுாரி தொடங்க கால தாமதம் ஏற்படும்.
எனவே, மருத்துவ கல்லுாரிகளின் இணை கல்லுாரியாக, அங்குள்ள கட்டடங்களில், குறைந்தது 50 பேரை சேர்த்து, கல்லுாரி தொடங்க முயற்சித்து வருகிறோம்.
சில கல்லுாரிகளில் இடவசதி பற்றாக்குறை காணப்படுகிறது. விரைவில், சாத்தியக்கூறு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்து, அரசிடம் அறிக்கை அளிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், குறிப்பிட்ட இடங்களில் மருந்தியல் கல்லுாரிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
