10ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 525 ஆக குறைப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 525 ஆக குறைப்பு
UPDATED : மார் 28, 2026 05:16 PM
ADDED : மார் 28, 2026 05:17 PM
பெங்களூரு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 3வது மொழித்தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாது என அறிவிக்கப்பட்டதால், 625 ஆக இருந்த மொத்த மதிப்பெண்; 525 ஆக குறைந்துள்ளது.
கர்நாடகாவில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மூன்று மொழித்தேர்வுகளை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். இதில், மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது வேறு மொழியை மாணவர்களே தேர்வு செய்து படிக்கலாம். பெரும்பாலான மாணவர்கள் ஹிந்தி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டாம்; 3வது மொழித்தேர்வின் மதிப்பெண்ணை, மதிப்பெண் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என, கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வந்தனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் வீட்டுக்கு நேற்று கன்னட அமைப்பினர் சென்றனர். நீண்ட நேரமாக பேச்சு நடத்தினர். பின், அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
வரும் கல்வியாண்டு முதல், 3வது மொழித்தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. முன்னதாக, 625 ஆக இருந்த மொத்த மதிப்பெண்; தற்போது, 525 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம், வரும், 31ம் தேதி நடக்கும் 3வது மொழித்தேர்வில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். 3வது மொழித் தேர்வில் மார்க் வழங்குவதற்கு பதிலாக 'கிரேடு' வழங்கப்படும்.
முதல்வர் சித்தராமையாவிடம் ஆலோசித்த பின்னரே இந்த முடிவை அறிவிக்கிறேன். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆணை விரைவில் வெளியிடப்படும். மாணவர்களின் சுமை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

