10 சதவீத இட ஒதுக்கீடு சான்றிதழ் புதிய நடைமுறை அறிவிப்பு
10 சதவீத இட ஒதுக்கீடு சான்றிதழ் புதிய நடைமுறை அறிவிப்பு
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:16 AM
புதுச்சேரி:
அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கல்வி சான்றிதழ் சமர்ப்பிப்பதில் புதிய மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீத அரசு ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகின்றது. கடந்தாண்டு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் 20 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தனர். இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் புதுச்சேரி பிராந்தியத்தில் முதன்மை கல்வி அதிகாரியிடமும், மற்ற பிராந்தியங்களில் மண்டல கல்வி அதிகாரியிடம் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படித்ததாக கல்வி சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதை தொடர்ந்து கல்வி துறை அதிகாரிகளிடம் அரசு பள்ளி மாணவர்கள் சென்று சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த கல்வி சான்றிதழ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளில் தொடர்ச்சியாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்ததற்கான கல்வி சான்றிதழை பெற்று சமர்ப்பித்தால் போதும் என சென்டாக் அறிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழை பள்ளி கல்வித் துறை ஆய்வு செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சென்டாக் இந்த முடிவினை அறிவித்துள்ளது.