பன்னாட்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க 100 நாடுகளுக்கு அழைப்பு: அமைச்சர் தகவல்
பன்னாட்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க 100 நாடுகளுக்கு அழைப்பு: அமைச்சர் தகவல்
UPDATED : ஆக 26, 2025 12:00 AM
ADDED : ஆக 26, 2025 10:01 AM
சென்னை:
''சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள பன்னாட்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க, 100 நாடுகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்,'' என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்கு, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின், நான்கு புதிய நுால்களை வெளியிட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
சிலர் தமிழை 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி என்கின்றனர். அவர்கள் தமிழ், தமிழ் என்று சொல்கின்றனரே தவிர, தமிழ் மொழிக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. மாறாக, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை, பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மொழி எனக்கூறி, நம்மை சிறுமைப்படுத்தி சுருக்க பார்க்கின்றனர்.
கீழடி ஆய்வின்படி, 5,300 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதை மூடி மறைக்கும் வேலையை, மத்திய அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். வேற்றுமை தான் நம் அடையாளம்.
எல்லா இடத்திலும் ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு இருந்தால், சரியாக இருக்காது. தமிழ் நமது அடையாளம். ஆங்கிலம் வெறும் வாய்ப்பு தான். அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள, பன்னாட்டு புத்தக திரு விழாவில் பங்கேற்கும் படி, 100 நாடுகளுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

