பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் பாடத்தில் 668 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் பாடத்தில் 668 பேர் ஆப்சென்ட்
UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 10:38 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி, முதல்நாள் தேர்வான தமிழ் பாட தேர்வை 40 ஆயிரத்து 430 பேர் எழுதினர். 668 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. கோவை மாவட்டத்தில், 158 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
காலை 10:00 மணிக்குத்தொடங்கிய தேர்வு, 1.15 மணிக்கு நிறைவடைந்தது. முதல் நாள் தேர்வான தமிழ் பாடத் தேர்வை, 40 ஆயிரத்து 430 மாணவர்கள் எழுதியுள்ளனர். 668 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 2,860 அலுவலர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளிமையத்தை, கலெக்டர் கிராந்திகுமார்நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ் ஆசிரியர்கள் கூறுகையில், முக்கியமான கேள்விகள் என எதிர்பார்த்தசில கேள்விகள் வரவில்லை. குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, சற்று கடினமான தேர்வுதான்.
ஒரு மதிப்பெண் கேள்விகள் சில குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. எட்டுமதிப்பெண் கேள்விகள் சில மாணவர்கள் யோசித்து எழுதக்கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன. மற்றபடி, மிகவும் எளிதான தேர்வாக அமைந்திருந்தது என்றனர்.
மாணவி பிரித்திகா கூறுகையில், ஒரு மதிப்பெண் கேள்விகளில் 3 கேள்விகள் சற்று குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நல்ல மதிப்பெண் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மாணவர் ரஞ்சித் கூறுகையில், எட்டு மதிப்பெண் கேள்விகள் முக்கியமானவை அல்லாத சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆனாலும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது என்றார்.

