11,053 மாணவ, மாணவியருக்கு பார்வை குறைபாடு கண்டுபிடிப்பு
11,053 மாணவ, மாணவியருக்கு பார்வை குறைபாடு கண்டுபிடிப்பு
UPDATED : ஜூலை 28, 2025 12:00 AM
ADDED : ஜூலை 28, 2025 08:52 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் கண்ணொளி காப்போம் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஓராண்டாக, மேற்கொண்ட கண் பரிசோதனையில், 11,053 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு முதல் கண்ணொளி காப்போம் திட்டம் பள்ளி மாணவர்களுக்காக, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வாயிலாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 6 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, கண் பரிசோதனை செய்யப்படுகிறது.
கண் பரிசோதனையில் குறைபாடுகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவதால், பார்வை குறைபாட்டை எளிதாக சரிசெய்யவும், மேற்கொண்டு பாதிப்பு அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ள முடிகிறது.
கோவையில் ஓராண்டாக மேற்கொண்ட பரிசோதனையில், 7.3 சதவீத மாணவர்களுக்கு, பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமியிடம் கேட்டபோது, அரசின் கண்ணொளி காப்போம் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கோவையில், 2024 ஏப்., முதல் மார்ச் 2025 வரையில், 514 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக, 1,51,132 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 11, 053 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு அனைவருக்கும் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.