UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 10:02 PM

சென்னை:
தமிழ், 15 லட்சத்துக்கும் அதிகமான கலைச்சொற்களை உடைய வளமான மொழியாக உள்ளது என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று நடந்தது.
பரிசுகளை வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
உலகில், புதிய புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. அது சார்ந்த கலைச்சொற்களும், பல்வேறு மொழிகளில் உருவாகின்றன. பழமையான மொழியான தமிழ், கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றது.
இதை உணர்த்தும் வகையில், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில், சொற்குவை என்ற திட்டத்தின் வாயிலாக, புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்து துறைகளிலும் உள்ள கலைச்சொற்களுக்கு நிகராக, 15 லட்சத்து 33,669 கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு உள்ளன.
அந்த சொற்கள், sorkuvai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் பேச்சுக்கலைக்கு வளமான மொழி. அதை வளர்க்கவும், தலைவர்களின் சாதனை சரித்திரங்களை, மாணவர்கள் அறியவும், அவர்களின் பிறந்த நாளில் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தேடுதல், சிந்தனை திறன்களுடன் வகைப்படுத்தி பேசும் திறனும் அதிகரிக்கிறது. இவ்வாறு பேசினார்.
விழாவில், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள், கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மதன் கார்க்கி, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.