அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் 15 சதவீதம் சரிவு!
அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் 15 சதவீதம் சரிவு!
UPDATED : ஆக 26, 2026 04:57 PM
ADDED : ஆக 26, 2026 04:59 PM

வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடுமையாக்கப்பட்டு வரும் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 15 சதவீதம் குறைந்துள்ளது.
நம் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை வெளிநாட்டில் படிக்க விரும்பினால் அவர்களின் முதல் தேர்வாக இருப்பத அமெரிக்கா. அங்கு தங்கி படிக்கும் சர்வதேச மாணவர்களில், 31 சதவீதம் பேர் இந்தியர்கள். கடந்த, 2024 - 25 கல்வி ஆண்டில் மட்டும், 3.63 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
15 சதவீதம் குறைவு
அமெரிக்காவிற்கு அதிக மாணவர்களை அனுப்பும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் நம் நாடு உள்ள நிலையில், நடப்பாண்டில் அமெரிக்க கல்லுாரிகளில் சேர இந்திய மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. அதாவது, 1,100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 'காமன் ஆப்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில், ஒட்டுமொத்த உள்நாட்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருந்தாலும், மார்ச் 1 வரையிலான நிலவரப்படி சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள், 10 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள், 15 சதவீதம் குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே மிகக் கடுமையான வீழ்ச்சியாகும். குடியேற்றக் கொள்கைகள் மற்றும் கடும் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, 2025 - 26ல் 11.69 லட்சமாக இருந்த சேர்க்கை, 2026 - 2027ல் 10.57 லட்சமாக குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
கடந்த 1978 முதல், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முடிந்த பின், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் புதிய கொள்கையின்படி, மாணவர்கள், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். மேலும், படிப்பை முடித்த பின், வேறு கல்லுாரிக்கு மாற அல்லது நாட்டை விட்டு வெளியேற, 60 நாட்கள் அவகாசம் இருந்தது. அதுவும் 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், படிப்பை முடித்த பின் அமெரிக்காவில் வேலை செய்ய உதவும் ஓ.பி.டி., எனப்படும் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தை பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, 95 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி காலத்தில் பணிபுரியும் மாணவர்கள், அப்படியே வேலைக்கான எச்1பி விசாவுக்கும் மாற முடியும். ஆனால் அந்த நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று படிக்கும் ஆர்வத்தை குறைத்துக் கொண்டு, கனடா, ஆஸ்திரேலியா போன்று நாடுகளுக்கு படையெடுப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தை பாதிக்கும்
சர்வதேச மாணவர்களின் வருகைக் குறைவு, அமெரிக்கப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச மாணவர்கள், 2025 - 26ல் அமெரிக்க பொருளாதாரத்திற்கு, 3.98 லட்சம் கோடி ரூபாய் பங்களித்துள்ளனர். இது, 2026 - 27ம் ஆண்டில் 3.66 லட்சம் கோடி ரூபாயாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விசா கட்டணம் உயருகிறது!
அமெரிக்காவில் உயர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான எச்1பி விசா கட்டணத்தை, 99 லட்சம் ரூபாயாக உயர்த்தும், புதிய விதியை, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களால், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாகக் கூறி கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம், 1.9 லட்சம் ரூபாயாக இந்த விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனை அந்நாட்டு நீதிமன்றம் சட்டவிரோதம் எனக்கூறி தடை செய்திருந்தது.
அந்த தற்காலிக தடை உத்தரவு செப்டம்பருடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டச் சிக்கல்களைத் தாண்டி எச்1பி விசா கட்டண உயர்வை நிரந்தரமாக்கும் நோக்கில் புதிய விதிமுறையை டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த விதி பெரும்பாலும் இந்தியர்களையே அதிகம் பாதிக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில், 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 லட்சம் விசா ரத்தாகிறது!
அமெரிக்காவில் தற்காலிக சுற்றுலா அல்லது வணிக விசாவில் நுழைந்துவிட்டு, பின்னர் அகதி அந்தஸ்து கோரி தங்கியிருக்கும் 2 லட்சம் பேரின் விசாக்களை அதிரடியாக ரத்து செய்ய டொனால்டு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2016 மற்றும் 2026ம் ஆண்டுகளுக்கு இடையில் வணிகத்திற்கான பி - 1 மற்றும் சுற்றுலாவுக்கான பி - 2 விசாக்களைப் பெற்று, அமெரிக்காவில் தஞ்சம் கோரியுள்ள வெளிநாட்டினர் இதன் கீழ் வரவுள்ளனர்.
எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவிக்கவில்லை. விசாக்கள் ரத்து செய்யப்பட்டாலும், உடனடியாக அனைவரும் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும், அவை பரிசீலிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்ற, கடந்தாண்டு ஜனவரியில் இருந்து இது வரை 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
