தமிழகத்தில் 16 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிப்பு; முக கவசம் அணிய அறிவுரை
தமிழகத்தில் 16 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிப்பு; முக கவசம் அணிய அறிவுரை
UPDATED : செப் 26, 2025 09:17 AM
ADDED : செப் 26, 2025 09:19 AM

சென்னை:
'காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற, மருத்துவமனை வருவோர் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளிகளில் மாணவ - மாணவியர் இடையே, காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துங்கள்' என பெற்றோருக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில், பரவ துவங்கிய காய்ச்சல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பரவுவது, 'இன்ப்ளுயன்ஸா' வகை காய்ச்சல் என, அரசு தெரிவித்தாலும், அதே அறிகுறிகளுடன், வேறு வகையான வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும், அதிகம் காணப்படுகின்றன.
இந்நிலையில், பெரியவர்களை விட, பள்ளி செல்லும் குழந்தைகள், காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. எனவே, பள்ளி செல்லும் குழந்தைகள், முகக்கவசம் அணிந்து செல்வதை உறுதிப்படுத்துங்கள் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 16 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எண்ணிக்கையாக பார்க்கும்போது பெரிதாக இருந்தாலும், எட்டு கோடி மக்கள் தொகையில், 2 சதவீத பாதிப்பு தான். இந்த பருவகாலத்தில் வைரஸ் பரவுவதற்கான சூழல் இருப்பதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காய்ச்சல் எளிதில் பரவுகிறது.
எனவே, அவரவர் தங்களை பாதுகாத்து கொள்வது முக்கியம். குறிப்பாக, அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளில், அதிகளவில் காய்ச்சல் பரவுகிறது.
பெரியவர்களை விட, குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கும்போது, வாந்தி காரணமாக, உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கு உடல் சோர்வு அதிகரிப்பதுடன், காய்ச்சல் சரியாவது தாமதமாகும்.
காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முடிந்தளவுக்கு, பள்ளிக்கு குழந்தைகள் முகக்கவசம் அணிந்து செல்வதை, பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.