1.63 லட்சம் மாணவர்களுக்கு சி.யு.இ.டி., நீட் தேர்வுகளுக்கு பயிற்சி
1.63 லட்சம் மாணவர்களுக்கு சி.யு.இ.டி., நீட் தேர்வுகளுக்கு பயிற்சி
UPDATED : மார் 29, 2025 12:00 AM
ADDED : மார் 29, 2025 04:50 PM
விக்ரம்நகர்:
சி.யு.இ.டி., மற்றும் நீட் தேர்வுகளுக்கு 1.63 லட்சம் ப்ளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ரேகா குப்தா மற்றும் மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ஆகியோர் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது, பிக் நிறுவனம் மற்றும் இயற்பியல் வல்லா நிறுவனத்துடன் மாநில கல்வி இயக்குநரகம் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள், மாநிலத்தின் 1.63 லட்சம் மாணவர்களுக்கு சி.யு.இ.டி., மற்றும் நீட் தேர்வுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்க உள்ளன. ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை தினமும் ஆறு மணி நேர பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், பொதுத் திறன், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சி குறித்து அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறியதாவது:
வரும் 2ம் தேதி முதல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு ஆறு மணி நேர வீதம் 30 நாட்களுக்கு 180 மணிநேர பயிற்சி வழங்கப்படும் என, இந்த முன்முயற்சி நம் மாணவர்களுக்கு முக்கியமான தேர்வுகளில் சிறந்து விளங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கும். இது சிறந்த மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சி அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் சேர்க்கை பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக டில்லி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் நல்ல கல்லுாரிகளில் சேரவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறவும் வாய்ப்பைப் பெறுவார்கள் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.