போராட்டத்திற்கு கிடைத்த பலன்; 169 செவிலியர்கள் பணி நிரந்தரம்
போராட்டத்திற்கு கிடைத்த பலன்; 169 செவிலியர்கள் பணி நிரந்தரம்
UPDATED : டிச 27, 2025 05:08 PM
ADDED : டிச 27, 2025 05:17 PM

சென்னை:
''முதல் கட்டமாக, 169 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளையும், 31 பணியாளர்களுக்கு பணிமாறுதல் ஆணைகளையும், அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில், 4,825 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. தமுள்ள, 8,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தற்போது, 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். முதல் கட்டமாக, 169 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 831 ஒப்பந்த செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் ஆணைகள் வழங்கப்படும்.
மேலும், 21 ஆண்டுக்கு பின், செவிலியர்களுக்கான பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் சலுகை, எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ தேர்வு வாரியம் நியமித்த செவிலியர்களுக்கும் வழங்க, விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

