UPDATED : பிப் 14, 2025 12:00 AM
ADDED : பிப் 14, 2025 09:24 AM

கோவை:
கோவையில் நடந்த கணித திறனறி தேர்வில், 188 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் கணித திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட கோவை மண்டலத்தை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோவை மண்டல அறிவியல் மையம் உட்பட, 25 மையங்களில் ஜன., 5ல் தேர்வு நடந்தது.
இதற்கு, 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும், 3,867 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்த நிலையில், 3,333 பேர் தேர்வை எழுதினர். நேற்று முன்தினம் முடிவுகள் வெளியான நிலையில், 188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண் அடிப்படையில், 5 முதல், 8ம் வகுப்பு வரை, ரூ.2,000, ரூ.1,500, ரூ.500, ரூ.250 என, மொத்தம் ரூ.70 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதில், கணபதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர் டியான் மைக்கல் மொத்தம் உள்ள, 32 இடங்களில், 30ம் இடத்தையும், ஏழாம் வகுப்பு மாணவி சஷிஜா வைஷாலி, 52 இடங்களில், 22ம் இடத்தையும், எட்டாம் வகுப்பு மாணவர் சஞ்சய், 77 இடங்களில், 61வது இடத்தையும், மாணவி சவர்ணா அனுஸ்ரீ, 68வது இடத்தையும் பிடித்துள்ளனர்.