2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களை ஊக்குவிக்க, தொழில்துறை 4.0
2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களை ஊக்குவிக்க, தொழில்துறை 4.0
UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 06:25 PM

சென்னை:
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலம் வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத திட்டத்திற்கு பங்களிக்க உறுதி ஏற்றுள்ளது.
2024-25ம் ஆண்டுக்கான சிஐஐ தென் மண்டல புதிய தலைவராக சந்திரா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர் நந்தினி மற்றும் துணைத் தலைவராக முத்தூட் பின்கார்ப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஜான் முத்தூட் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிஐஐ தென் மண்டல தலைவராக பொறுப்பேற்ற, சந்திரா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் நந்தினி பேசுகையில் தென்னிந்தியா@100 என்ற திட்டத்தின் கீழ், தொழிற்துறையில் போட்டித்திறன், வளர்ச்சி, நிலைத்தன்மை, நம்பிக்கை மற்றும் உலகமயமாக்கல் மூலம் மாற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டும், கல்வி, திறன்கள், நிலைத்தன்மை, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, ஆற்றல் மாற்றம், ஸ்டார்ட்அப்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் எளிய முறையில் வர்த்தகம், உற்பத்தி போட்டித்தன்மை, உலகளாவிய கூட்டாண்மை, நல்வாழ்வு மற்றும் சுகாதாரம் மற்றும் பிராண்ட் கட்டிடம் மற்றும் துறைசார் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் 9 டிராக் திட்டத்தை சிஐஐ தென் மண்டலம் துவங்குகிறது.
தொழிற்துறை வளர்ச்சிக்காக தென் மாநில அரசுகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற இருக்கிறோம். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களை ஊக்குவித்து வரும் ஆண்டுகளில் நிலையான தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
உற்பத்தி போட்டித்திறன் பிரிவின் கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து அவர் கூறுகையில், உற்பத்தி மற்றும் தொழில்துறை 4.0 தொடர்பாக மாநில அளவிலான கொள்கைகளை உருவாக்குவதில் நாங்கள் மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்., தென் மாநிலங்களின் பொருளாதார இலக்குகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இவை மிகவும் முக்கியமானவை ஆகும். தொழில்துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஆதரவாக டிஜிட்டல் மாற்றம் குறித்த மாநில அளவிலான பணிக்குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். இது முதன்மையாக சிஐஐ உறுப்பினர் நிறுவனங்களை தொழிற்துறை 4.0-க்கு தயார்படுத்துவதாகும்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நாங்கள் சிஐஐ சென்டர்ஸ் ஆப் எக்ஸலன்ஸ் உடன் இணைந்து போட்டித்தன்மை நிறைந்த இன்றையக் காலக்கட்டத்தில் தங்கள் தொழில்களை திறமையாக கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க இருக்கிறோம்.
வளர்ச்சி அடிப்படையில், மாநில அளவிலான தொழில்துறை கொள்கைகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள், செயற்கை நுண்ணறிவு, ஏற்றுமதி மற்றும் சரக்கு கையாளுதல், உணவு பதப்படுத்துதல் மற்றும் தூய்மை எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம். மேலும் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் உள்ள தொழில் பூங்காக்களை மேம்படுத்துவதில் அரசு இணைந்து செயல்பட இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தென் மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, சிஐஐ தென் மண்டலத்தின் துணைத் தலைவரும் முத்தூட் பின்கார்ப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான தாமஸ் ஜான் முத்தூட் கூறுகையில், சிஐஐ தென் மண்டலத்தைப் பொறுத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 63 சதவீதமாக உயர்ந்து தற்போது இதில் 3069 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1418 உறுப்பினர்களுடன் நாட்டியிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது என்று தெரிவித்தார்.