பிஎச்.டி., தேர்வு முறைகேடு விசாரணை குழுவில் 2 உறுப்பினர்கள் விலகல்; சொதப்பியதா பல்கலை கன்வீனர் குழு
பிஎச்.டி., தேர்வு முறைகேடு விசாரணை குழுவில் 2 உறுப்பினர்கள் விலகல்; சொதப்பியதா பல்கலை கன்வீனர் குழு
UPDATED : ஜன 03, 2025 12:00 AM
ADDED : ஜன 03, 2025 09:13 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் நடந்த பிஎச்.டி., நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்கும் குழுவில் இடம் பெற்ற 2 உறுப்பினர்கள் அப்பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டனர். இதனால் விசாரணை குழு முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலையில் பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைத் தேர்வு 2024, செப்., 22ல் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற மாணவர்கள் சிலரிடம் பல்கலை அலுவலர்கள் பணம் பெற்றதாக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் அரசு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கருக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. இப்புகார்கள் குறித்து விசாரிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி இப்பல்கலை பயோடெக்னாலஜி புலத்தலைவர் கணேசன் தலைமையில் 5 பேர் குழுவை பல்கலை அமைத்தது.
ஒரு வாரத்திற்கு முன் குழு அமைத்து விசாரணை துவங்காத நிலையில் அக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியை வரலட்சுமி ஆகியோர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளனர். அதில் உடல்நிலையை காரணம் காட்டி விலகுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் விசாரணைக் குழுவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
சொதப்பியதா கன்வீனர் குழு
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
இக்குழுவை முடிவு செய்தது கன்வீனர் குழு. துணைவேந்தர் இல்லாத நிலையில் நியமிக்கப்பட்ட இக்குழு சின்டிகேட் உறுப்பினர்களிடம் கூட தெரிவிக்காமல் தன்னிச்சையாக பல முடிவுகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணை குழு அமைத்ததும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவே. குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்களிடம் கூட முன்கூட்டியே விருப்பம் கேட்கவில்லை.
பல்கலை விசாரணைக் குழுவில் ஒரு சின்டிகேட் உறுப்பினர் இடம் பெறுவதுமரபு. ஆனால் அதையும் கன்வீனர் குழு மீறியுள்ளது.
பல்கலையில் அனுபவம் உள்ள சீனியர் பேராசிரியர் பலர் உள்ள நிலையில், ஜூனியர் உதவி பேராசிரியர்களை இடம் பெறச் செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே கன்வீனர் குழுவில் அனுபவம் உள்ள சீனியர் சின்டிகேட் உறுப்பினரை இடம் பெற செய்ய உயர்கல்வித்துறை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.