UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM
ADDED : ஜூலை 25, 2024 09:47 AM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கோவில் திருவிழாவில் வெடிக்காத பட்டாசுகளை கொளுத்திய பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
விருத்தாசலம் அடுத்த சிவனார்குப்பம் அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அதனையொட்டி, இரவு வாண வேடிக்கை நடந்தது. அதில் வெடிக்காத பட்டாசுகளை அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி பள்ளி அருகே குப்பையில் குவித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வரும் சிவனார்குப்பம் சாமிநாதன் மகன் செந்தமிழ்அரசன்,11; தொட்டிக்குப்பம் பிரகாஷ் மகன் ஸ்ரீதர்,8; ஆகியோர் நேற்று மதியம் குப்பையில் கிடந்த வெடிக்காத பட்டாசுகளை பிரித்து மருந்தை குவித்து கொளுத்தினர்.
அதில் ஏற்பட்ட தீப்பிழம்பு பரவியதில் மாணவர்கள் இருவருக்கும் முகம் மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்ட ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஓடிச் சென்று இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

