பசுமை பள்ளிகள் திட்டத்தில் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி
பசுமை பள்ளிகள் திட்டத்தில் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி
UPDATED : ஜன 16, 2025 12:00 AM
ADDED : ஜன 16, 2025 12:11 PM
சென்னை:
காலநிலை மாற்றத்தால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, பசுமை பள்ளிகள் திட்டத்தில், 100 பள்ளிகளுக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தற்போது தவிர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. இதுகுறித்து அறிந்து கொள்ளவும், பாதிப்புகளை சமாளிக்கவும், சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளை, பள்ளிகள் நிலையிலேயே துவங்க வேண்டியுள்ளது.
இதற்காக, பசுமை பள்ளிகள் திட்டம், 2022ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், 2022 - 23ம் நிதியாண்டில், 25 பள்ளிகள்; 2023 - 24ம் நிதியாண்டில், 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
நடப்பு நிதியாண்டில் இத்திட்டம், 100 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 100 பள்ளிகளில் சூழல் மேம்பாட்டு பணிகளுக்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய நிதியில் இத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதற்காக மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதியில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில், சூரிய சக்தி மின்சார உற்பத்தி, சொட்டு நீர் பாசனம், மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான அரசாணையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் பி. செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.