200 சிப் வடிவமைப்பு நிறுவனங்கள்; செமிகண்டக்டர் 2.0 திட்டத்தில் இலக்கு
200 சிப் வடிவமைப்பு நிறுவனங்கள்; செமிகண்டக்டர் 2.0 திட்டத்தில் இலக்கு
UPDATED : செப் 19, 2026 03:27 PM
ADDED : செப் 19, 2026 03:29 PM

புதுடில்லி:
நம் நாட்டில் குறைந்தது 200 சிப் வடிவமைப்பு நிறுவனங்களை உருவாக்குவதை, 'செமிகண்டக்டர் 2.0' திட்டத்தில் இலக்காக கொண்டுள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற 'செமிகான் இந்தியா 2026' மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
செமிகண்டக்டர் 2.0 திட்டத்தின் ஆறு முக்கிய தூண்களில் முதலாவது, சிப் வடிவமைப்பு. முந்தைய செமிகண்டக்டர் 1.0 திட்டத்தில், நம் நாட்டில் சிப் வடிவமைப்பில் ஈடுபட, 105க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டன. இதில் கிட்டத்தட்ட 20 நிறுவனங்கள், சுமார் 800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை பெற்றுள்ளன.
இது தொடக்கம் மட்டுமே. இம்முறை நமது இலக்கு மிகப்பெரியது. இந்தியாவில் பல்வேறு வகையான செமிகண்டக்டர் தேவைகளுக்கான சிப்களை வடிவமைக்கும், 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மற்ற ஐந்து துாண்களாக இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள், மேம்பட்ட பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறமையான மனிதவளம் ஆகியவை இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உலகின் மையமாவதே இலக்கு
இந்தியாவின் செமிகண்டக்டர் பயணம் வேகமாக முன்னேறி வருகிறது. சிப் தயாரிப்பில் உலகின் மையமாக மாறும் நமது இலக்கை இந்த மாநாடு உறுதி செய்கிறது. நம் நாட்டின் அடுத்தகட்ட டிஜிட்டல் மாற்றம், அதனால் எத்தனை பேர் இணைக்கப்படுகிறார்கள் என்பதை காட்டிலும், எவ்வாறு புத்திசாலித்தனமாக, பாதுகாப்பாக, பொறுப்புடன், அனைவரையும் உள்ளடக்கிய வகையில் இணைக்கப்படுகிறார்கள் என்பதில் தான் உள்ளது.
- நரேந்திர மோடி, பிரதமர்.
