20,000 மாணவர்கள் சி.பி.ஆர்., பயிற்சி கங்கா மருத்துவமனை கவுரவிப்பு
20,000 மாணவர்கள் சி.பி.ஆர்., பயிற்சி கங்கா மருத்துவமனை கவுரவிப்பு
UPDATED : அக் 18, 2026 06:43 PM
ADDED : அக் 18, 2026 06:44 PM
கோவை:
இதயத் துடிப்பு நின்று உயிருக்கு போராடுபவர்களுக்கு, அவசர காலங்களில், முதலுதவி அளிக்கும் வகையில், 'பார்வையாளர் முதல் உயிர் காப்பவர் வரை' என்ற தலைப்பில், கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு மற்றும் தீவிர பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில், 10 கல்லுாரிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உலக இதய தினமான கடந்த செப்., 29ல், இப்பயிற்சி துவங்கியது. கங்கா மருத்துவமனையில் வெள்ளியன்று நிறைவடைந்தது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 'உயிர்' அமைப்புடன் இணைந்து நடத்தின. அதிகபட்ச மாணவர்களுக்கு சிபிஆர் பயிற்சி அளித்தமைக்காக, 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பு, இச்சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவர்களை பாராட்டினர். கங்கா மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரியின் இயக்குநர்கள் முறையே கனகவல்லி சண்முகநாதன், டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகரன், நிர்மலா ராஜசபாபதி, ரமா ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மங்களகிரி எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரவிகுமார், கங்கா மருத்துவமனை மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெபகுமாரி சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
