2010ல் பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் ஹால் டிக்கெட்!
2010ல் பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் ஹால் டிக்கெட்!
UPDATED : டிச 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை 2010ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவர்களின் புகைப்படம் இருக்கும்.
இதன்மூலம் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்க முடியும். தேர்வுகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அனைத்து அரசுத் தேர்வுகளிலும் புகைப்படத்துடன் கூடிய கம்ப்யூட்டர் மூலம் தயாரிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஆள்மாறாட்டத்தைத் தடுக்க இந்த முறை உதவியாக இருக்கும். இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பதை சரிபார்க்க முன்னோட்டமாக இ.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்களுக்கு இந்த முறையில் தயாரிக்கப்பட்ட ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. மொத்தம் 7.500 மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ஹால் டிக்கெட் வழங்கியதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்கிறார் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசந்தி ஜீவானந்தம்.
ஐந்திலிருந்து ஆறு லட்சம் மாணவர்கள் வரை பிளஸ்2 தேர்வு எழுதுகிறார்கள். 8 லட்சம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதுகின்றனர். எனவே, கம்ப்யூட்டர் மூலம் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கும் முறையை இந்த ஆண்டே செயல்படுத்த முடியவில்லை என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
