2025ல் விண்வெளிக்கு ‘டூர்’ போகலாம்: ‘சந்திரயான்’ அண்ணாதுரை
2025ல் விண்வெளிக்கு ‘டூர்’ போகலாம்: ‘சந்திரயான்’ அண்ணாதுரை
UPDATED : நவ 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு ‘டூர்’ போகலாம்,” என, சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
ரோட்டரி கிளப்ஸ் ஆப் கோயம்புத்தூர், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து ‘சந்திரயான் 1’ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு, ‘பூர்ண சந்திரா’ விருது வழங்கும் நிகழ்ச்சியை, கல்லூரி கலையரங்கில் நவ. 17ம் தேதி நடத்தின.
விருதைப் பெற்றுக் கொண்ட, சந்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
உனது வாழ்க்கையை பார்த்து மற்றவர்கள் சொல்ல வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை. நீ எவ்வாறு கல்வி கற்று இருக்கிறாய், என்பதையும் மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். 50 வயதிலும் சாதிக்க முடியும். இந்த விழா சாதனை செய்ததற்காக நடத்தப்படுவது அல்ல; இன்னும் சாதிப்பதற்காக நடக்கிறது.
சந்திரயான் என்பது முடிவல்ல; ஆரம்பம். அது இன்னும் பல கட்டங்களைத் தாண்டிச் செல்லும். இந்த விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய பிறகும் சாதித்து விட்டோம் என்ற எண்ணம் ஏதுமில்லை. வாழ்க்கை என்பது வயிற்றுக்காக அல்ல; அதற்கும் மேல். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
பின் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், “வரும் 2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு பொதுமக்கள் ‘டூர்’ செல்லமுடியும். அதற்குள் விண்வெளியில் அளப்பரிய சாதனைகளை செய்து விடுவோம்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் அணுசக்தி கழக முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், கோவை கலெக்டர் பழனிக்குமார், கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை வேந்தர் சண்முகானந்தம், ரோட்டரி கிளப்ஸ் ஆப் கோயம்புத்தூர் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
