செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பள்ளிகளில் ரூ.6 கோடியில் 22 கூடுதல் வகுப்பறைகள்
செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பள்ளிகளில் ரூ.6 கோடியில் 22 கூடுதல் வகுப்பறைகள்
UPDATED : ஜன 09, 2025 12:00 AM
ADDED : ஜன 09, 2025 07:23 AM
செம்மஞ்சேரி:
சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, கண்ணகி நகரில் உள்ள அரசு துவக்க பள்ளியில், 570 பேர் படிக்கின்றனர்.
இங்கு, 17 வகுப்பறைகள் இருந்தன. இதில், ஐந்து வகுப்பறைகள் மிகவும் சேதமடைந்து இருந்ததால், அதை இடித்து விட்டு, புதிய வகுப்பறைகள் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 3.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 11,853 சதுர அடி பரப்பில், மூன்று அடுக்கில், 12 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.
ஒவ்வொரு வகுப்பறையும், 400 சதுர அடி பரப்பு கொண்டது. ஒவ்வொரு மாடியிலும், 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை வீதம் கட்டப்படுகிறது. இதே மண்டலம், 200வது வார்டில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில், 800க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
இங்கு, 18 வகுப்பறைகள் உள்ளன. இடப்பற்றாக்குறை உள்ளதால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 2.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 6,774 சதுர அடி பரப்பில், 10 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. வரும் கல்வியாண்டு முதல், புதிய வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு விடும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

