4 லிட்டர் பெயின்ட் பூச 233 பேர்: ம.பி., அரசு பள்ளியில் பகல் கொள்ளை
4 லிட்டர் பெயின்ட் பூச 233 பேர்: ம.பி., அரசு பள்ளியில் பகல் கொள்ளை
UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 10:31 AM
போபால்:
மத்திய பிரதேச அரசு பள்ளியின் ஒரு சுவரில் 4 லிட்டர் பெயின்டை பூச, 233 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டதாக பில் தயாரித்து, பகல் கொள்ளை அரங்கேறிஉள்ளது.
மத்திய பிரதேசத்தின் சக்தோல் மாவட்டத்தின் பியோஹரி தொகுதிக்கு உட்பட்ட சகான்டி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதில் உள்ள ஒரு சுவரில் 4 லிட்டர் பெயின்ட் பூச வேண்டியிருந்தது.
இந்த பெயின்டை பூச 168 பெயின்டர்கள், 65 கொத்தனார்கள் என 233 தொழிலாளர்கள் வேலை செய்ததாக, கடந்த மே 5ல் பில் தயாரித்துள்ளது அந்தப் பணியை பெற்ற கட்டுமான நிறுவனம்.
இதற்கான செலவுத் தொகையாக 1.07 லட்சம் ரூபாயை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, அந்த கட்டுமான நிறுவனம் அனுப்பிய பில் இப்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதேபோல் நிபன்யா கிராமத்தில் உள்ள மற்றொரு அரசு பள்ளியில், 10 ஜன்னல்கள் மற்றும் நான்கு கதவுகளுக்கு 20 லிட்டர் பெயின்ட் அடித்ததாக, 2.30 லட்சம் ரூபாயை அதே நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த பெயின்டை கதவு, ஜன்னல்களில் பூச 275 தொழிலாளர்கள் மற்றும் 150 கொத்தனார்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் அனுப்பிய மற்றொரு பில்லும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த பில்லுக்கு அந்த பள்ளியின் முதல்வர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், இதுவரை அந்த இரு பள்ளிகளிலும் பெயின்ட் அடிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
சமூக வலைதளத்தில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அப்பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அந்த அதிகாரி.