இலவச கல்வியில் 25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு
இலவச கல்வியில் 25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 11:19 AM

கோவை:
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், இலவச கல்வி வழங்குவது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு வரும் 22 முதல் மே 20ம் தேதி வரை, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, தனியார் பள்ளி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2024- -- 2025ம் கல்வி ஆண்டில், எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்கு, 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன. இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் கல்வி பயில, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சில மூடப்பட்டுள்ளதால் அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, சில பள்ளிகள் தங்களது பதிவை புதுப்பிக்காமல் உள்ளன.
இப்பணிகள் நிறைவடைந்த பின், இலவசக் கல்வி ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மொத்த இடங்கள் குறித்த முழுவிவரம் தெரியவரும். ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும், வட்டார வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.