ஏனாமில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று முதல் 3 நாள் விடுமுறை
ஏனாமில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று முதல் 3 நாள் விடுமுறை
UPDATED : அக் 27, 2025 08:16 AM
ADDED : அக் 27, 2025 08:21 AM

புதுச்சேரி:
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஏனாமில், இன்று (27ம் தேதி) முதல் 29ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏனாம் மண்டல நிர்வாக அலுவலக செய்திக்குறிப்பு;
மோந்தா புயல் நாளை (28ம் தேதி) காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. அதையடுத்து, புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில், இன்று (27ம் தேதி) முதல் நாளை மறுநாள் 29ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் நாளை (28ம் தேதி) மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. அந்த நேரத்தில், மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக, கனமழை பெய்யக்கூடும். ஏனாம் நிர்வாகம் அவசரகால மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மண்டல நிர்வாக அலுவலகத்தில், 0884 - 2321223, 2323200 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் செயல்படும் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புயலை எதிர் கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. புயல் தாக்குவதற்கு முன்பு மரங்கள், மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றவும், தீயணைப்பு துறையுடன் இணைந்து செயல்பட மின் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரகால மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மருந்துகள், ஆம்புலன்ஸ்கள் தயாராக இருக்க சுகாதாரக் குழுக்களை நியமிக்குமாறு சுகாதாரத் துறை துணை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

