UPDATED : ஜன 20, 2025 12:00 AM
ADDED : ஜன 20, 2025 02:19 PM
புதுடில்லி:
ராம்லீலா மைதானத்தில், கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்ட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முகுந்த்பூரைச் சேர்ந்த நிகில், கடந்த 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு சிறுவன் நிகிலிடம் வாக்குவாதம் செய்தான். மைதானத்தில் இருந்து சென்ற சிறுவன், சற்று நேரத்தில் மேலும் மூன்று சிறுவர்களுடன் மீண்டும் மைதானத்துக்கு வந்தான். நிகிலை துப்பாக்கியால் சுட்டு விட்டு 4 பேரும் தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து, அங்கிருந்த ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பால்ஸ்வா டெய்ரி போலீசார் விரைந்து வந்து, நிகிலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இருந்து 4 சிறுவர்களையும் அடையாளம் கண்டுபிடித்து, டில்லி மேம்பாட்டு ஆணைய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே பதுங்கி இருந்த 3 சிறுவர்களை கைது செய்து, ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மற்றொரு சிறுவனை தேடுகின்றனர். நான்கு சிறுவர்களும் அரசுப் பள்ளியில் பிளஸ்1 படிக்கின்றனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.