என்.ஆர்.ஐ., சீட் பெற போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்ப்பு
என்.ஆர்.ஐ., சீட் பெற போலி ஆவணம் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்ப்பு
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:23 AM
புதுச்சேரி:
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சீட் பெற, போலி துாதரக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 பேர் சேர்க்கப்பட்டனர்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரி எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியவர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத அடிப்படையில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு 4 கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலியான துாதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
44 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்கள் ரத்து செய்து, லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் சென்டாக் புகார் அளித்தது. 44 மாணவர்கள் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், அதனை உண்மை என சமர்ப்பித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இரண்டாம் கட்டமாக 6 சான்றிதழ் மற்றும் 25 சான்றிதழ் என 31 மாணவர்களும் போலி துாதரக சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. போலி ஆவணம் சமர்பித்த 31 மாணவர்களின் பட்டியல் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் 31 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையில் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு சில ஏஜென்ட்டுகள் போலி துாதரக சான்றிதழ்கள் கொடுத்து இருப்பது தெரியவந்தது. ஏஜென்டுகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.