UPDATED : மே 08, 2025 12:00 AM
ADDED : மே 08, 2025 10:22 AM
சேலம்:
சேலம் - பெங்களூரு விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதால், பயணியர் மற்றும் விமானப் பயணக் கனவில் வந்த 34 மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் விமான நிலையத்தில் இருந்து, பெங்களூரு, கொச்சி பகுதிகளுக்கு பயணியர் விமான சேவையை, அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த சேவை, மத்திய அரசின், உடான் திட்டத்தில் இயக்கப்படுவதால் கட்டணம் குறைவு. இதனால், அதிக பயணியர் சென்று வருகின்றனர்.
நேற்று தொழில்நுட்ப கோளாறால், சேலம் - பெங்களூரு, சேலம் - கொச்சி பகுதிகளுக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த விபரம், நேற்று காலை தான் பயணியருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பலரும், விமான நிலையம் வந்து திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் இருந்து, 34 மாணவ - மாணவியரின் விமான பயண கனவை நனவாக்க, சேலம் ரவுண்ட் டேபிள் - 28 அமைப்பினர் ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தனர்.
அவர்களை கலெக்டர் பிருந்தாதேவி வாழ்த்தி, விமான நிலையத்துக்கு வழியனுப்பினார். அங்கு மாணவ - மாணவியர் வந்தபின், விமானம் ரத்து செய்யப்பட்ட விபரம் தெரிந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
பின், அவர்களுக்கு விமான நிலையத்தை சுற்றி காட்டிவிட்டு, மதியம், 2:00 மணிக்கு பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். மற்றொரு நாள், விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர் என, அமைப்பினர் தெரிவித்தனர்.