அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 37 பேருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு.. கனவு நனவானது!
அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 37 பேருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு.. கனவு நனவானது!
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 09:19 AM

திருப்பூர்:
கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள் நீங்கள்... ஏனெனில் உங்கள் கரங்களால் பலரது உயிர்கள் பிழைக்கின்றன மருத்துவர்கள் குறித்து சிலாகித்துச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. நீட் தேர்வெழுதி, மாநில அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம், மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.
நீட் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வெழுதி, மாநில அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 37 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவக்கல்வி பயிலும் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக அரசு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் நீட் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று அதிகளவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மருத்துவக்கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி, நீட் தேர்வுக்கு அவர்களை தயார்படுத்தும் பணியில், மாவட்ட கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு மாணவ, மாணவியர், நீட் தேர்வெழுதி, மருத்துவம் படிக்க தேர்வாகின்றனர்.
நடப்பாண்டு மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், 386 பேர் நீட் நுழைவு தேர்வெழுத விண்ணப்பித்தனர். அவர்களில், 354 பேர் தேர்வெழுதினர். 163 பேர் தகுதி பெற்றனர். மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 21 பேர், பி.டி.எஸ்.,(பல் மருத்துவம்) படிப்புக்கு, 6 பேர் என, மொத்தம், 27 பேர் மருத்துவம் படிக்கும் ஆணையை பெற்றனர். இவர்கள் தவிர தகுதி பெற்ற, 10 பேர், பி.டி.எஸ்., படிப்பை தொடர விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். 9 பேர், பொது கவுன்சிலிங்கிற்காக காத்துள்ளனர்.
எண்ணிக்கை உயர்கிறது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரின் ஊக்குவிப்பு மற்றும் மேற்பார்வையில், நீட் தேர்வெழுதி, மருத்துவக் கல்லுாரியில் நுழைய விரும்பும் மாணவ, மாணவியருக்கு உரிய ஊக்குவிப்பு, பயிற்சி வழங்கப்படுகிறது. உயர்கல்வி பயில்வதற்கான அரசின் திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு பெரிதும் துணைபுரிகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இணைவதற்கான ஊக்குவிப்பும், பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதால், ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.மாவட்ட அளவில், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி, கே.எஸ்.சி., பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், என்.சி.பி., மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி என, 5 மையங்களில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதன் விளைவாக, இந்தாண்டு எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என திருப்பூர் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறினார்.