'தமிழ் மொழியின் சிறப்பை எடுத்து சொல்லும் காசி தமிழ் சங்கமம் 4.0'
'தமிழ் மொழியின் சிறப்பை எடுத்து சொல்லும் காசி தமிழ் சங்கமம் 4.0'
UPDATED : டிச 02, 2025 09:37 AM
ADDED : டிச 02, 2025 09:40 AM

சென்னை:
'தமிழின் பெருமையை உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் வாயிலாக, மற்ற மாநில மக்கள் தமிழ் கற்கவும், தமிழ் மொழியின் சிறப்பை உணரும் வாய்ப்பை பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளார்' என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை பிரதிபலிக்கும் உன்னத நிகழ்ச்சியான, காசி தமிழ் சங்கமத்தின் நான்காம் பதிப்பு துவங்குகிறது.
'தமிழ் கற்கலாம்' என்ற முழக்கத்துடன் நடக்கும் காசி தமிழ் சங்கமம், தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் முக்கிய மையப் புள்ளியாகி உள்ளது. தமிழ் கலாசாரம், தமிழ் மொழியின் பெருமையை, பாரத நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் தெரிந்து கொள்ள, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக, உ.பி., மாநிலம் வாரணாசியில் டிச., 2 முதல் 15ம் தேதி வரை, 'காசி தமிழ் சங்கமம் 4.0' நடக்கிறது. இதில், தமிழகத்தில் இருந்து ஏழு குழுக்கள் காசி வந்து, காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்வதுடன், ஆன்மிக அனுபவத்தையும் பெற உள்ளனர்.
இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிச., 15 முதல், 31ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சி முக்கியமானது. வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வருவர். இந்த பயணத்தில், தமிழ் கலாசாரம், நாகரிகம் மற்றும் மொழியை அறிந்து கொள்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

