'டெலிகிராம்' மீதான தற்காலிக தடை சரியானதே: மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது கோர்ட்
'டெலிகிராம்' மீதான தற்காலிக தடை சரியானதே: மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது கோர்ட்
UPDATED : ஜூன் 20, 2026 02:23 AM
ADDED : ஜூன் 20, 2026 02:23 PM

'நீட்' மறு தேர்வின் போது வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'டெலிகிராம்' செயலியை தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை நுழைவுத்தேர்வு, நாடு முழுதும் மே 3ல் நடந்தது. இதை, 22 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. இந்த சூழலில், நீட் மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நாளை நடக்கிறது.
தேர்வின் போது வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை, வரும் 22 வரை தற்காலிகமாக முடக்கி, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியை, வரும் 30 வரை முடக்கியும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தனி நீதிபதி தேஜஸ் காரியா விசாரித்தார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, டெலிகிராம் செயலி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
'டெலிகிராம் செயலி ஒரு 'டார்க்வெப்' போல செயல்படுகிறது. அதில் பாதுகாப்பு அம்சங்களே இல்லை. அதனால் தான் மோசடிக்காரர்கள் அதை பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றவாளிகளை கண்டறிவது கடினமாகிறது' என, அவர் வாதிட்டார். இந்த குற்றச்சாட்டுகளை டெலிகிராம் மறுத்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தனி நீதிபதி தேஜஸ் காரியா அளித்த தீர்ப்பு:
'டெலிகிராம்' செயலியை தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே. தேர்வு செயல்முறையின் நேர்மையை பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமானது. மத்திய அரசின் தடை உத்தரவு, சட்டவிரோதமானது அல்ல. இதை மிகையானது எனக்கூற முடியாது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், '69 ஏ' பிரிவின் கீழ் மத்திய அரசு பின்பற்றிய நடைமுறைகள் சரியானவை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
