'பெரி' கல்லுாரிக்கு சென்னை பல்கலை 'நோட்டீஸ்' நிலம் தொடர்பான விபரங்களை அளிக்க உத்தரவு
'பெரி' கல்லுாரிக்கு சென்னை பல்கலை 'நோட்டீஸ்' நிலம் தொடர்பான விபரங்களை அளிக்க உத்தரவு
UPDATED : மே 22, 2026 07:57 PM
ADDED : மே 22, 2026 07:59 PM
சென்னை:
நிலம் உட்பட அடிப்படை கட்டமைப்புகள் குறித்த விபர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, 'பெரி' கல்வி நிறுவனத்துக்கு, சென்னை பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
சென்னை, தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில், பெரி அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்வி நிறுவன நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், நிலத்தை ஈடாக காட்டி, கடன் பெற்றது. இந்த கடன் தொகையை, அவர்கள் குறிப்பிட்ட காலத்தில், திரும்ப செலுத்தவில்லை.
இதனால், பெரி கல்வி நிறுவனம், ஈடாக காட்டியிருந்த, 14.90 ஏக்கர் நிலத்தை ஏலம் விட, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஏலம் தொடர்பாக, ஐந்து முறை அறிவிப்பு வெளியிட்டும், யாரும் பங்கேற்க முன்வரவில்லை.
இந்நிலையில், இந்த நிலத்தை, எஸ்.ஆர்.எம்., குழுமம், வங்கியில் பணம் செலுத்தி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து, நிலத்துக்கான உரிமை, எஸ்.ஆர்.எம்., குழுமத்திடம் சென்றுவிட்டது.
இதை எதிர்த்து, பெரி கல்வி நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் எவ்வித சாதகமான உத்தரவும் கிடைக்காத நிலையில், அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
நிலம் வேறு நிறுவனத்திடம் சென்ற நிலையில், அங்கு பெரி கல்வி நிறுவனம் எப்படி தொடந்து செயல்படும் என்ற கேள்வி எழுந்தது. இது போன்ற கல்வி நிறுவனங்கள், தொடர்ந்து செயல்பட, சென்னை பல்கலை, அண்ணா பல்கலை ஆகியவற்றிடம் இணைப்பு ஒப்புதல் பெற வேண்டும்.
சொந்தமாக நிலம், கட்டடம் இல்லாத நிலையில், பெரி குழுமத்தின் கல்லுாரிகளுக்கான அனுமதியை புதுப்பிக்க கூடாது என, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அனுப்பப்பட்டது. சென்னை பல்கலைக்கும் புகார் வந்துள்ளது.
அதன் அடிப்படையில், பெரி நிறுவனம் தங்கள் கல்லுாரிக்கான நிலம், கட்டடம் தொடர்பான விபரங்களை, உரிய ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும் என, சென்னை பல்கலை சார்பில், பெரி கலை அறிவியல் கல்லுாரி முதல்வருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, பல்கலை அதிகாரிகள் கூறுகையில், “புகார் அடிப்படையில், பெரி கல்லுாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.
