மருத்துவத்தில் புரட்சி ஏற்படுத்தும் 'ஆல்பா போல்ட்' நுண்ணறிவு
மருத்துவத்தில் புரட்சி ஏற்படுத்தும் 'ஆல்பா போல்ட்' நுண்ணறிவு
UPDATED : ஜன 05, 2026 05:13 PM
ADDED : ஜன 05, 2026 05:16 PM

'ஆல்பா போல்ட்' என்ற செயற்கை நுண்ணறிவு, அரை நுாற்றாண்டுகளாக தீர்க்க முடியாத மருத்துவ சோதனைகளை இன்று தீர்த்துள்ளது. உடல் உறுப்புகள் இயங்குவதற்கு, திசுக்களில் உள்ள புரதங்களின் அமினோ அமிலங்கள் உதவுகின்றன. இந்த அமினோ அமிலங்கள், நீண்ட பல கோடி சங்கிலிகள் போல தோற்றத்தில் இருக்கும்.
இந்த சங்கிலியின் வடிவத்தை அறிந்து கொள்வதற்கு, பல ஆண்டுகள் கடுமையான ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆல்பா போல்ட் என்ற செயற்கை நுண்ணறிவை, 'கூகுள்' நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது, உடல் உறுப்புகளின் திசுக்களில் உள்ள சிக்கலான புரத சங்கிலி, வினாடியில் எப்படி சுருங்கும், எந்த வடிவில் சுருங்கும் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடுகிறது.
நன்மைகள் வைரஸ், பாக்டீரியா மற்றும் குடல் கொக்கிப்புழு போன்றவற்றின் புரத சங்கலியின் தன்மையையும், அதை அழிக்கவல்ல மருந்தையும் மிக வேகமாக தயாரித்து விடுகிறது. தீராத புற்று நோய், அல்சைமர், மறதி நோய் ஆகியவற்றுக்கு காரணமான, தாறுமாறாக சுருங்கும் புரத சங்கிலியையும் கண்டுபிடித்து, அதற்கு தீர்வாக மருந்தையும் ஆல்பா போல்ட் உதவியுடன் கண்டறிந்து விடலாம்.
சுற்றுப்புற சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக்குகளை உண்டு அழிக்கும் புரதங்களையும், இந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கி, பிளாஸ்டிக் குப்பையை அழித்து விடலாம்.
செயற்கை நுண்ணறிவு, மாசை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு பூட்டை திறக்க, ஒரு சாவி தேவை. அந்த பூட்டின் வடிவத்தை கண்டறிந்தால், அதற்கு ஏற்றாற்போல் சாவியை எளிதில் செய்து விடலாம்.
இந்த செயற்கை நுண்ணறிவு, பாக்டீரியா, வைரஸ்களின் புரத சங்கிலியை எளிதில் கண்டறிந்து விடுகிறது. அதன் பிறகு, அதற்கேற்றாற்போல் மருந்தையும் சொல்லி விடுகிறது.
நோபல் பரிசு ஆல்பா போல்டை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கும், இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மனித இனம், கோவிட் காலங்களில் தடுப்பூசி இல்லாமல், சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தது. இப்போது, ஆல்பா போல்ட் உதவியால், சில மாதங்களிலேயே எப்பேற்பட்ட நோய்க்கும் தடுப்பூசி கண்டறிந்து விட முடியும்.
குணப்படுத்த முடியாத தீர்வு காணாத நோய்களுக்கு போதிய மருந்து இல்லாத நிலையில், ஆல்பா போல்ட் பேருதவியாக இருக்கப் போகிறது.
புற்று நோய் செல்கள், நம் உடலில் உள்ள சாதாரண செல்களின் புரதங்களை மாற்றி அமைத்து, வேகமாக வளர்கின்றன. ஆல்பா போல்ட், இந்த புரதங்களின் செயல்களை நேரலையில் கண்டு, ஆரோக்கியமான திசுக்களை பாதிக்காமல், புற்று நோய் திசுக்களை மட்டும் தாக்கி அழிக்கும் துல்லியமான, வலிமையான மருந்தை உருவாக்க முடியும்.
புரத சங்கிலிகள் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகும் நோய்களை குணப்படுத்துவதில், இந்த நுண்ணறிவு இன்றியமையாத பணியை செய்யப் போகிறது.
சில நேரங்களில், ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியால் ரத்தத்தில் பாக்டீரியா வளர்ந்து, உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து, மரணத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம், பாக்டீரியாக்களின் புரத சங்கிலிகள் மாறி விடுவதே.
பாக்டீரியா கிருமிகள் எப்படி ஆன்டிபயாடிக்கிடமிருந்து தப்பிக்கின்றன என்பதை கண்டறிந்து, பாக்டீரியாக்களால் எதிர்க்க முடியாத ஆன்டிபயாடிக் மருந்துகளை தயாரிக்க முடியும்.
கடந்த காலங்களில் ஒரு மருந்தை தயாரிக்க, இருட்டிலேயே கல் எறிந்து அதை தேடுவது போன்ற நிலையாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது ஆல்பா போல்ட் மூலம், புரதத்தின் வடிவத்தை நேரடியாக பார்த்துவிட்டு, அதற்கு பொருத்தமான மருந்தை, பூட்டுக்கு சாவி செய்வது போல துல்லியமாக செய்துவிட முடியும்.
- பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி, இதய ஊடுருவல் நிபுணர், டாக்டர் எஸ்.ஏ ஹார்ட்கிளினிக், ராயப்பேட்டை, சென்னை

