மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்'
மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்'
UPDATED : அக் 29, 2025 08:36 AM
ADDED : அக் 29, 2025 08:38 AM

கோவை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஜாலி போனிக்ஸ் ரெப்ரஷ்மென்ட் அண்ட் ஜாலி கிராமர்' என்ற பெயரில், சிறப்பு பயிற்சி சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள, அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை எளிதில் கற்றுக்கொடுக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பேரூர், சூலூர், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட 15 ஒன்றியங்களில் பணியாற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது.
ஒரு ஒன்றியத்திற்கு 5 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 75 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் பயிற்சியில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கருத்தாளர் கோமதி கூறுகையில், ''தனியார் பள்ளிகளில் பயிலும் முன்பருவ நிலை மாணவர்கள், சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது போல், அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, 'போனிக்ஸ்' முறையில் மாணவர்களுக்குக் கற்றுத்தர, ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார்.

