புத்தகம் திருவிழாவில் 'அன்பு புத்தக பெட்டி' ; புத்தகம் வழங்கிய 3 வயது சிறுமி
புத்தகம் திருவிழாவில் 'அன்பு புத்தக பெட்டி' ; புத்தகம் வழங்கிய 3 வயது சிறுமி
UPDATED : ஆக 31, 2025 12:00 AM
ADDED : ஆக 31, 2025 09:37 AM

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் புத்தகம் பரிசளிக்க விரும்புபவர்களுக்காக அன்பு புத்தகப்பெட்டி எனும் புதிய திட்டத்தை கலெக்டர் சரவணன் துவக்கிவைத் நிலையில், 3 வயது சிறுமி அன்பளிப்பாக புத்தகம் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் 12வது புத்தக திருவிழா திருச்சி சாலையில் உள்ள அங்கு விலாஸ் பள்ளி மைதானத்தில் நடந்து வருகின்றன. 28ம் தேதி துவங்கிய திருவிழா தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை செப்., 7 வரை நடக்கிறது. மூன்றாம் நாளான நேற்று புத்தகம் பரிசளிக்க, தானம் வழங்க புதிதாக அன்பு புத்தகப்பெட்டி திட்டத்தை கலெக்டர் சரவணன் துவங்கி வைத்தார்.
அன்பு புத்தகப்பெட்டிக்கு மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் அன்பளிப்பாக புத்தகங்களை வழங்கலாம். இதில் பெறப்படும் புத்தகங்கள் அரசு பள்ளி நுாலகங்கள், ஊராட்சிகளில் செயல்படும் நுாலகங்கள், 150 கிளை நுாலகங்களுக்கு வழங்கப்பட உள்ளது. முதலாவதாக கலெக்டர் சரவணன், 'திருக்குறள் புத்தகங்கள் வாங்கி அன்பு புத்தகப்பெட்டிக்கு அன்பளிப்பாக வழங்கினார். இதை பார்த்த 3 வயது சிறுமி ஜாய் பிரின்ஸ் நானும் புத்தகம் கொடுக்கவேண்டும் என தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.இதையடுத்து புத்தக ஸ்டாலில் புத்தகம் வாங்கிய அவர் கலெக்டர் சரவணன் முன்னிலையில் அன்பு புத்தகப்பெட்டிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

