கல்வித்துறையில் 'எம் லிஸ்ட்' பணி மாறுதல்கள்; தகுதியான அலுவலர்கள் புலம்பல்
கல்வித்துறையில் 'எம் லிஸ்ட்' பணி மாறுதல்கள்; தகுதியான அலுவலர்கள் புலம்பல்
UPDATED : அக் 01, 2025 11:04 PM
ADDED : அக் 01, 2025 11:06 PM

மதுரை:
கல்வித்துறையில் மாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில் காலியாக உள்ள அலுவலர்களுக்கான பணியிடங்களில் 'எம் லிஸ்ட்' (அமைச்சர் அலுவலகம் சிபாரிசு) மாறுதல்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது. அதேநேரம் தகுதியுள்ளவர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
இத்துறையில் பர்சார் (நிதியாளர்), கண்காணிப்பாளர் முதல் உதவியாளர் வரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கு போல் இவர்களும் ஜூலை முதல்வாரத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இதில் கண்காணிப்பாளர், உதவியாளர் என 250 பேர் பதவி உயர்வு பெற்றனர். அவர்களின் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது.
காலிப் பணியிடங்களுக்கு மாறுதல் கேட்டு மாநிலம் முழுவதும் 200 பேர் வரை தற்போது அந்தந்த சி.இ.ஓ.,க்கள் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.
இவை அனைத்தும் தற்போது இணை இயக்குநர் (பணியாளர் தொகுப்பு) அலுவலகத்தில் உள்ளது. ஆனால் கல்வி அமைச்சர் அலுவலகம் பரிந்துரைத்த (எம் லிஸ்ட்) அலுவலர்களுக்கு மட்டுமே தற்போது மாறுதல் உத்தரவு வழங்கப்படுவதாகவும், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
கல்வித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
பொதுக் கலந்தாய்வுக்கு பின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் மாறுதல் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலியிடங்கள் விவரங்களை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்க வேண்டும். ஆனால் இதுபோல் எதுவும் இல்லாமல், 'எம் லிஸ்ட்' விண்ணப்பங்களுக்கு மட்டும் அதிகாரிகள் மாறுதல் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
பணவசதி இல்லாதவர்கள் பாதிக்கின்றனர். தற்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் பொதுக்கலந்தாய்வு நடத்தி சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.