ஸ்காலர்ஷிப் மோசடி தவிர்க்க உதவும் 'சஹ்யோக் போர்டல்'
ஸ்காலர்ஷிப் மோசடி தவிர்க்க உதவும் 'சஹ்யோக் போர்டல்'
UPDATED : டிச 08, 2025 07:48 AM
ADDED : டிச 08, 2025 07:49 AM

கோவை:
கல்வி உதவித் தொகை மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், மோசடி பேர் வழிகளின் தகவல்களை சஹ்யோக் போர்டலில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாதந்தோறும், ரூ.1500 கோடி வரை ஆன்லைன் மோசடியில் பணம் இழக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி மோசடிகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ்,2 முடித்தவர்கள் தங்களது அடுத்த கட்ட கல்வியில் சேர்வர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகின்றன.
இந்த உதவி தொகையை பெற்றுத்தருவதாக மாணவர்களை ஏமாற்றும் மோசடியை, கும்பல் ஒன்று அரங்கேற்றி வருகிறது. மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு லிங்க் அனுப்பி மோசடி செய்கின்றனர். கடந்த மாதம் வரை, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், 170 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ரூ.50 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
பிளஸ்-1 மற்றும் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தான் இக்கும்பலின் இலக்கு. கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறும் மோசடி நபர்கள், அம்மாணவர்கள் பயின்ற பள்ளியின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிப்பதால், மாணவர்கள் நம்பி விடுகின்றனர்.
இறுதியாக மொபைல்போனுக்கு க்யூ.ஆர்., கோடு அனுப்பி மோசடி செய்கின்றனர். மாணவர்கள், பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தகவல்கள் வரும் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை, சஹ்யோக் போர்டலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண் மோசடி எண்ணாக பதிவு செய்யப்பட்டு, தடை செய்யப்படும். இதன் வாயிலாக மோசடிகள் குறையும்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.

