UPDATED : செப் 10, 2025 12:00 AM
ADDED : செப் 10, 2025 03:17 PM
தங்கவயல்:
தங்கவயல் வட்டார கல்வித்துறை சார்பில் நேற்று ஆசிரியர்கள் தினவிழா பாரண்ட ஹள்ளியில் நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்து தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசியது:
ஆசிரியர் பணி என்பது மிக உயர்வானது. ஒருவரை மருத்துவராக, போலீஸ் அதிகாரியாக, பொறியாளராக, விஞ்ஞானியாக உருவாக்கும் அடித்தளம் தான் கல்வித் துறை. இதன் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சமூக அக்கறை மிக முக்கியமாகும்.
பிள்ளைகள் தம் பெற்றோருடன் இருப்பதை விட பள்ளிகளில் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிக நேரம் இருக்கின்றனர். அவர்களை நல்வழியில் கொண்டு செல்லும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. பள்ளிகளுக்கு வராதவர்களை தேடி அழைத்து வந்து போதிக்கும் கடமையும் உள்ளது. கர்நாடக மாநில அரசும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆசிரியர்களை ஆராதிக்கும் விழாவாக இதை காண்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத், நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, வட்டார கல்வி அதிகாரி அனிதா, தாசில்தார் பரத், அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நரசிம்ம மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் கவுரவிக்கப்பட்டனர்.